தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயிலில் அடிபட்டு பலி
பொன்னேரி:தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர், மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயில், நேற்று காலை 11:00 மணிக்கு, பொன்னேரி ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, 70 வயது மதிக்கத்தக்க முதியவர், முதல் நடைமேடையில் இருந்த கவுன்டரில் டிக்கெட் வாங்கி கொண்டு, இரண்டாவது நடைமேடைக்கு செல்வதற்காக, அங்கிருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, நடைமேடைக்கு வந்து கொண்டிருந்த புறநகர் மின்சார ரயிலில் அடிபட்டு, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், முதியவரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். எண்ணுார் செல்வதற்காக டிக்கெட் எடுத்திருந்ததால், அப்பகுதியை சேர்ந்தவரா என, விசாரிக்கின்றனர்.