சாலையின் நடுவில் மின்கம்பம் மின்வாரிய துறையினர் அலட்சியம்
திருத்தணி:திருத்தணி அடுத்த, கார்த்திகேயபுரம் இருளர் காலனியில், 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள விநாயகர் கோவில் தெருவில் சாலையின் நடுவில் மின்கம்பம் அமைத்து, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளதால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும் இரவு நேரத்தில் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி தவிக்கின்றனர்.இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என, தொடர்ந்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் மனுக்கள் கொடுத்தனர்.இதன் விளைவாக, கடந்த மாதம் சாலை நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றுவதற்கு, சாலையோரம் புதிய மின்கம்பம் மட்டும் நடப்பட்டது.ஆனால், இதுவரை மின்ஒயர்கள் மாற்றி அமைக்காமல் உள்ளதால், தொடர்ந்து வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே மின்வாரிய துறையினர் அலட்சியம் காட்டுவதை, மாவட்ட நிர்வாகம் தலையீட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.