உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள்... புற்றீசல்!: எல்லை கற்கள் மாயமாவதால் விரிவாக்கப்பணி சுணக்கம்

நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள்... புற்றீசல்!: எல்லை கற்கள் மாயமாவதால் விரிவாக்கப்பணி சுணக்கம்

திருவாலங்காடு: மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள எல்லை கற்கள் மாயமாவதால் சாலையோர கடைகள், கட்டடம் என, ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன. இதனால், சாலை விரிவாக்க பணி மிகுந்த சவாலாக இருக்கும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் நெடுஞ்சாலை துறையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் ஒன்பது கண்காணிப்பு பொறியாளர்கள், 55 கோட்ட பொறியாளர்கள் மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் 197 உதவி கோட்ட பொறியாளர்கள், 296 எண்ணிக்கையிலான உதவி பொறியாளர்களால், 66,382 கி.மீ., நீளமுள்ள பல்வேறு வகையான அரசு சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் கோட்ட பொறியாளர் கண்காணிப்பில் திருவள்ளூர், அம்பத்துார், பூந்தமல்லி, திருத்தணி, பள்ளிப்பட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி என, ஏழு உட்கோட்ட அலுவலகம் இயங்கி வருகின்றன.இக்கோட்டத்திற்கு உட்பட்டு திருமழிசை,- ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், -செங்குன்றம், -கடம்பத்துார்,- சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், திருவாலங்காடு, -அரக்கோணம் உட்பட 20க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைகளில், 1,500 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.மாநில நெடுஞ்சாலைகளில் தொடர் ஆக்கிரமிப்புகள் குறித்து புகார் வந்த நிலையில், நெடுஞ்சாலை துறை பராமரிப்பிலுள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றி, 2010ல் துறை சார்பில் அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அதன்பின், நெடுஞ்சாலை துறை சார்பில் குறிப்பிட்ட இடைவெளியில், சாலையின் இருபுறங்களிலும் எல்லை கற்கள் நடப்பட்டன. இதனால், நெடுஞ்சாலைத் துறைக்குரிய இடம் துல்லியமாக தெரிந்தது; ஆக்கிரமிப்புகளும் தடுக்கப்பட்டது.காலப்போக்கில், எல்லை கற்கள் பராமரிப்பு குறித்து, நெடுஞ்சாலைத் துறையினர் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் எல்லை கற்கள் மாயமாகி, ஆக்கிரமிப்புகள் தாராளமாக நடக்கிறது.நகர மற்றும் புறநகர் பகுதிகளில் முக்கிய சாலைகளை ஒட்டி, பல அடி துாரத்துக்கு நிரந்தர மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஆக்கிரமிப்பாளர்கள், எல்லை கற்களை அப்புறப்படுத்துவது, மண் போட்டு மூடுவது உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.அதன்பின், சாலையோரத்தில் நிரந்தர கட்டுமானங்களை மேற்கொள்கின்றனர். இவ்வாறு, மாநில நெடுஞ்சாலைகளில் அதிக ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளன. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இந்த ஆக்கிரமிப்பு இருந்தாலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.சாலையோரம் நிரந்தர கட்டுமானம் செய்த பின், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் திணற வேண்டியுள்ளது. கிராமப்புற சாலையோரத்தில், மழைநீர் வடிந்து செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து கடை கட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.இதன் காரணமாக, பல இடங்களில் வடிகால்வாய் இருந்த சுவடே தெரிவதில்லை. இதனால், சாலையில் மழைநீர் தேங்குகிறது.இதுகுறித்து திருவள்ளூரைச் சேர்ந்த ஆர்.விஜயகுமார் கூறியதாவது:திருவாலங்காடு, ஊத்துக்கோட்டை, திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில், வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகி உள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பால் குறுகலாகி வருகின்றன.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, நெடுஞ்சாலைத் துறை சார்பில், அனைத்து சாலைகளிலும் அளவீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இடம் தெளிவாக தெரியும்படி, எல்லை கற்களை நட்டு, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இப்பணிகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், சாலை விரிவாக்க பணிகள் எதிர்காலத்தில், பெரிய சவாலாக மாறி விடும். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.எல்லை கற்கள் இருப்பது குறித்து உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர்களிடம் அறிவுறுத்தப்படும். மேலும், தேவையான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.- நெடுஞ்சாலை துறை அதிகாரி,திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை