உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின் பொறியாளர் அலுவலகம் தனியாக அமைத்தும்...பயனில்லை: 96 ஊழியர்களில் 6 பேரே உள்ளதால் பணி பாதிப்பு

மின் பொறியாளர் அலுவலகம் தனியாக அமைத்தும்...பயனில்லை: 96 ஊழியர்களில் 6 பேரே உள்ளதால் பணி பாதிப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்திற்கு, புதிதாக மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம், கடந்த மாதம் துவக்கப்பட்ட நிலையில், நியமனம் செய்த அதிகாரிகள் இதுவரை பொறுப்பேற்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட, 96 இடங்களில், தற்போது 6 பேர் மட்டுமே பணியில் உள்ளதால், பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.திருவள்ளூர் மாவட்டம் உருவாகி, 30 ஆண்டுகளாகியும் இதுவரை மின்தேவையில் தன்னிறைவை அடையவில்லை. காஞ்சிபுரம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில், இதுவரை திருவள்ளூர் மாவட்டம் செயல்பட்டு வந்தது. மாவட்டத்தில், பழுதடைந்த மின் கம்பங்கள், ஒயர், மின்மாற்றி மாற்றம் போன்ற எந்த குறை குறித்து புகார் தெரிவிக்கவும், காஞ்சிபுரத்தை நம்பியே இருந்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி ஆகிய இரண்டு கோட்ட பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. இக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, கடை, வணிக நிறுவனங்கள் என, 1.5 லட்சத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன; 80,000க்கும் மேற்பட்ட விவசாய இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.இரண்டு கோட்டத்திற்கு உட்பட்டு, 19 மின் வினியோக மையங்களும், 60க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் வாயிலாக மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. புதியதாக, வீடு கட்டுவோர், தற்காலிக மற்றும் நிரந்தர மின் இணைப்பு கோரி, தங்கள் பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து, பணம் செலுத்தி வருகின்றனர்.புதிய மின் இணைப்பு வழங்க மின்கம்பங்கள், ஒயர்கள் தட்டுப்பாடும் நிலவுகிறது. மின்மாற்றி அமைக்கவும், பழுதான மின்மாற்றிகளை அப்புறப்படுத்தி, புதிதாக நிர்ணயம் செய்யவும், போதுமான இருப்பு இல்லை.இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு தனியாக கண்காணிப்பு பொறியாளர் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதன் பயனாக, கடந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தை தலைமையாக வைத்து, மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் நியமனம் செய்யப்பட்டார்.இதையடுத்து, பெரியகுப்பம் மேம்பாலம் அருகில் உள்ள, தனியார் கட்டடம் வாடகைக்கு பெறப்பட்டு, அங்கு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் கடந்த டிச., மாதம் திறக்கப்பட்டது. இருப்பினும் அரசு அனுமதித்த, 96 பணியிடங்களில் தற்போது 6 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். மற்ற இடங்களில் யாரும் பணியில் சேராததால், அலுவலகம் வெறிச்சோடி காட்சியளிக்கிறது.இதுகுறித்து, திருவள்ளூர் மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தை தலைமையாக கொண்டு, திருவள்ளூர், திருமழிசை மற்றும் திருத்தணி ஆகிய செயற்பொறியாளர் அலுவலகம் இணைக்கப்பட்டு, தனி மின்பகிர்மான வட்டம் உருவாக்கப்பட்டது. இந்த அலுவலகத்திற்கு என, மேற்பார்வை பொறியாளர்-1, செயற்பொறியாளர்-2, உதவி செயற்பொறியாளர்-6, உதவி பொறியாளர்-7 உட்பட மொத்தம், 96 பணியிடங்களுக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நியமிக்க உத்தரவிடப்பட்டது.தற்போது, கண்காணிப்பு பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் நிலையில் 6 பேர் மட்டுமே அலுவலகத்தில் பணிபுரிகின்றனர். மீதம் உள்ள, 90 இடங்கள் காலியாக உள்ளது. அலுவலகத்தை திறந்து வைத்து, பராமரிக்க உதவியாளர் கூட இன்னும் பணியில் சேரவில்லை. புகார் மனுவை பெற, அதற்கான அலுவலர் இல்லாததால், பொதுமக்கள் அதிருப்தியடைந்து வருகின்றனர். மேலும், மூன்று கோட்ட மின்வாரிய தேவையை பூர்த்தி செய்யவும் இயலாமல், பணிகள் அனைத்தும் பாதிப்படைந்து உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதுகுறித்து, கண்காணிப்பு பொறியாளர் அலுவலக அலுவலர் ஒருவர் கூறுகையில், 'திருவள்ளூர் மின்பகிர்மான வட்டத்திற்காக, நியமிக்கப்பட்ட பலரும் இன்னும் பணியில் சேரவில்லை. இதுகுறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். பணி ஒதுக்கீடு பெறப்பட்ட அலுவலர்கள், விரைவில் பணியில் சேர உத்தரவிடப்படும்' என்றார்.

ஓராண்டு செலவினம் ஒதுக்கீடு

திருவள்ளூர் மின்பகிர்மான வட்ட அலுவலகத்திற்கு, ஒரு ஆண்டிற்காக, 13.19 லட்சம் ரூபாயை மின்வாரியம் ஒதுக்கி உள்ளது. இதன்படி, அலுவலக வாடகை மாதம், 40,000 வீதம், 4.80 லட்சம்; உயர் அதிகாரிகளுக்கு 2 கார் வாடகை-6.00 லட்சம்; தொலைபேசி கட்டணம்-29,148 ரூபாய், தளவாட பொருட்கள்-2.10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், அலுவலக பணியாளர்களுக்கு சம்பளமும், 'டான்ஜெட்கோ' நிதியில் இருந்து பெறவும், ஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை