மேலும் செய்திகள்
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
17-Sep-2025
திருத்தணி:விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் உயரதிகாரிகள் வராமல், கீழ்மட்ட அலுவலர்கள் வருவதால், எங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை. விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் கிடையாது. கண்துடைப்பு கூட்டம் என, விவசாயிகள் ஆவேசமாக பேசினர். திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், ஆர்.டி.ஓ., கனிமொழி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்தனர். இதில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருத்தணி ஒன்றிய தலைவர் லிங்கமூர்த்தி பேசியதாவது: நேரடி கொள்முதல் நிலையத்தில் நிர்ணயித்த அளவைவிட, கூடுதலாக நெல் பெறப்பட்டுள்ளன. இதை வருவாய் துறை, வேளாண் துறையும் கண்காணித்து, கூடுதல் நெல் எவ்வாறு வந்தது என்பதை கண்டறிய வேண்டும். காம்பிளக்ஸ் உரம் வாங்கினால் தான், யூரியா உரம் தரப்படும் என, கூட்டுறவு சங்கம் மற்றும் ஆக்ரோ கடைகளில் விவசாயிகளை கட்டாயப்படுத்தி கூடுதலாக உரம் வாங்க வைக்கின்றனர். இதை தடுத்து, விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பங்கேற்ற சில விவசாயிகள், சம்பந்தப்பட்ட துறையின் உயரதிகாரிகள் கூட்டத்திற்கு வருவதில்லை. கீழ்மட்ட அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்பதால், விவசாயிகளின் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண முடிவதில்லை. இது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கிடையாது. கண்துடைப்பு கூட்டம் என, ஆவேசமாக ஆர்.டி.ஓ.,விடம் புகார் தெரிவித்தனர். இனி வரும் கூட்டத்தில், 'உயரதிகாரிகள் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆர்.டி.ஓ., உறுதியளித்தார். நிருபர்களுக்கு தடை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களிடம், ஆர்.டி.ஓ., கனிமொழி, 'நீங்கள் போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும். கூட்டத்தில் பங்கேற்று செய்தி சேகரிக்க கூடாது' எனக் கூறி, நிருபர்களை வெளியே அனுப்பினார்.
17-Sep-2025