பழவேற்காடு: பழவேற்காடில் கடல் அரிப்பு அதிகரித்து, கடலுக்கும், மீனவ கிராமங்களுக்குமான இடைவெளி குறைந்து வரும் நிலையில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நட்சத்திர வார்ப்புகள் கொண்ட துாண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். பழவேற்காடு மீனவப்பகுதியில் உள்ள கூனங்குப்பம், திருமலை நகர், வைரவன்குப்பம், கோரைகுப்பம், காளஞ்சி உள்ளிட்ட, 15 கிராமங்கள், வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும், 250 - 350 குடியிருப்புகளும், 8,000 - 10,000 மீனவ மக்களும் வசிக்கின்றனர். வழக்கமாக, புயல் காலங்களில் கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும். அச்சமயங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு, கடற்கரைக்கும், கடலோர மீனவ கிராமங்களுக்கும் இடையேயான இடைவெளி குறையும். அச்சமயங்களில் கடல் நீரானது, குடியிருப்புகளுக்கும், கிழக்கு கடற்கரை சாலை வரையும் செல்லும். இதனால், மீனவ மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கும். சமீப காலமாக புயல் அல்லாத நேரங்களிலும், கடற்கரையோரங்களில் கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. இதில், மீனவ கிராமங்களுக்கும், கடற்கரைக்குமான இடைவெளி, 100 - 150 மீட்டராக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், 500 மீட்டருக்கும் அதிகமாக இருந்த இடைவெளி, தற்போது கடல் அரிப்பு காரணமாக குறைந்து வருகிறது. இது, மீனவ கிராமங்களில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழவேற்காடில், கடல் அரிப்பால் பாதிப்பிற்கு உள்ளாகி வரும், கடற்கரையோர கிராமங்களின் அருகில், நட்சத்திர வார்ப்பு கற்கள் அமைக்க வேண்டும். மேலும், துாண்டில் வளைவுகள் அமைத்து, மீனவ கிராமங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.