உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாதாள சாக்கடை கால்வாயில் உடைப்பு அடிக்கடி ஏற்படுவதால் அவஸ்தை

பாதாள சாக்கடை கால்வாயில் உடைப்பு அடிக்கடி ஏற்படுவதால் அவஸ்தை

திருவள்ளூர்:திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் அடிக்கடி பாதாள சாக்கடை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள, டோல்கேட் பகுதியான 1வது வார்டில் துவங்கி, 27 வார்டுகளிலும் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், புதைகுழி குழாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. அந்த கழிவு நீர், சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையான, சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலை வழியாக, புட்லுார் ஏரி அருகில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கழிவு நீர் சாலையில் கொட்டி துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது.இந்நிலையில், சி.வி.நாயுடு சாலையில், அடிக்கடி பாதாள சாக்கடை புதை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேறி வருகிறது. அச்சமயங்களில் நகராட்சி நிர்வாகமும், அடைப்பை சீரமைத்து வருகிறது.இருப்பினும் நிரந்தரமாக பாதாள சாக்கடை உடைப்பை சீர்படுத்த இயலாமல் நகராட்சி நிர்வாகம் திகைத்து வருகிறது. பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கும் பணி நகராட்சி ஊழியர்களுக்கு பெரும் சவாலாக அமைகிறது.கடந்த சில நாட்களுக்கு முன், அதே இடத்தில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறியதால் அந்த இடம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு உள்ளது. சாலை நடுவில் 'பேரிகார்டு' அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த இடத்தில் போக்குவரத்து பாதித்து, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பாதாள சாக்கடை அடைப்பை சீர்படுத்தி, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திற்கு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி