| ADDED : ஜன 07, 2024 01:33 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் சேகரமாகும் இரண்டு டன் குப்பை சேகரமாகி வருகிறது.இதையடுத்து வெள்ளேரிதாங்கல் செல்லும் சாலையில் அரசு நிலத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 24 லட்சம் ரூபாய் மதிப்பில் உரக்கிடங்கு அமைக்கப்பட்டது.இந்த உரக்கிடங்கு மூலம் மட்கும், மட்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு குப்பையிலிருந்து உரம் தயாரித்து விற்கும் நோக்கில் துவக்கப்பட்டது.ஆனால், இந்த உரங்கிடங்கு அருகே உள்ள கன்னியம்மன் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தால் உரக்கிடங்கு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையோரம் அரசு நிலத்தில் குப்பை குவித்து வைக்கப்படுகிறது. இதனால், நெடுஞ்சாலையோரம் உள்ள கிடங்கில் மலைபோல் குவிந்து வரும் குப்பையால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருவதோடு தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் வெங்கத்துார் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள உரக்கிடங்கை செயல்பாட்டிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.