சாலை வசதி இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சாலை வசதி இல்லாததால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1951ம் ஆண்டு துவக்கப்பட்டது. பெரியபாளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே சாலை வசதி இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. பின் தார்சாலை அமைக்கப்படும் என நினைத்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்த வில்லை. இதனால் இங்கு சிகிச்சை பெற வருபவர்கள் செருப்பு இல்லாமல் நடக்க முடியாத நிலை உள்ளது. எனவே, கலெக்டர் பிரதாப் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளாகத்தில் தார்சாலை அமைக்க வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.