உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புறநகர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு தொடர அரசு... ஊக்குவிப்பு:  மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கும் பட்டா

புறநகர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு தொடர அரசு... ஊக்குவிப்பு:  மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கும் பட்டா

சென்னை புறநகர் பகுதிகள், அருகில் உள்ள மாவட்டங்களில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ளோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான பணிகளை அரசு அவசர கதியில் துவக்கியுள்ளது. படப்பையில், 200 ஏக்கருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டத்தில், ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு, வீட்டு மனை பட்டாவை அரசு வழங்கி வருகிறது. ஆனால், நீர்நிலை, மேய்க்கால் போன்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கப்படுவதில்லை. கால்நடைகள் மேய்ச்சலுக்கு தேவையான இந்த இடங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என, சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில், தமிழக அரசு புதிய கொள்கை முடிவு எடுத்து, சென்னை, சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கும் பட்டா வழங்க முடிவு செய்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் ஆறு மாதங்களே உள்ளதால், அதற்குள் பட்டா வழங்கும் பணிகளை முடித்து, ஓட்டு வங்கியாக மாற்ற, அரசு அவசரகதியில் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே உள்ள புஷ்பகிரி பகுதியில் உள்ள 200 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வசிப்போர் விபரங்கள் சேகரிக்கப்பட்டு , பட்டா வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கு முன், எதிர்கால அரசின் திட்டங்களுக்கும், சென்னை புறநகரில் முக்கிய இடமாக உள்ள படப்பை நிலம் தேவை என, அதிகாரிகள் கூறி வந்தனர். புஷ்பகிரி பகுதியில் உள்ள 200 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலங்களையும் மீட்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழக அரசு தீவிர முயற்சி செய்தது. ஆனால், தமிழக அரசின் மேலிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாக, அந்த நடவடிக்கை அப்போது கைவிடப்பட்டது. இதுகுறித்து, வருவாய் துறையைச் சேர்ந்த தாசில்தார் ஒருவர் கூறியதாவது: புஷ்பகிரி பகுதியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலம், அரசின் எதிர்கால தேவைக்கு பயன்படும் என்பது உண்மைதான். தற்போது, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் பட்டா வழங்க அரசு முடிவு செய்து, அதற்கான முயற்சி மேற்கொண்டுள்ளது. இதில், 200 ஏக்கருக்கு அரசு பட்டா வழங்குமா என்பது சந்தேகம் தான். அப்பகுதியில் வசிப்போருக்கு, 3 சென்ட் வரை மட்டுமே பட்டா வழங்க முடியும். ஏக்கர் கணக்கில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களுக்கு பட்டா வழங்க முடியாது. இந்த முடிவு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார். இதுபோன்று, சென்னை மற்றும் அதைச் சுற்றிய மாவட்டங்களிலும், பட்டா வழங்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆளும் தி.மு.க., அரசு, ஓட்டு வங்கியை அதிகரிக்கும் வகையில், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ளோருக்கு பட்டா வழங்கும் முடிவை எடுத்துள்ளது. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாலையோர வியாபாரிகளுக்காக

கடைகளாக மாறும் பஸ் நிலையம்

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், 1.5 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையோரம், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை, கடந்தாண்டு நவம்பர் மாதம், மாநில நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். மாற்று இடம் கோரி, ஆக்கிரமிப்பு கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி, பேருந்து நிலையத்தில், 40 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு, 60 லட்சம் ரூபாய் செலவில், 'ஷெட்' அமைத்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு, 197 கடைகள் ஒதுக்க அரசு முடிவு செய்தது. பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்கினால், பேருந்துகள் உள்ளே வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, பயணியர் சிரமத்திற்கு ஆளாக கூடும் என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் வகையில், தற்போது பேருந்து நிலையம் முழுவதையும் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 1.5 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த பேருந்து நிலையத்தை, ஜி.என்.டி., சாலையோரம் உள்ள சங்கு ஊதும் கோபுரம் அருகே, வெறும் 15 சென்ட் பரப்பளவில் அமைக்க, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் திட்டம் தயாரித்து வருகிறது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, பேருந்து பயணியரை வஞ்சிக்கும் அரசின் நடவடிக்கை மீது, கும்மிடிப்பூண்டி பகுதிமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ