கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் அரசினர் ஐ.டி.ஐ., - தொழிற் பயிற்சி நிலையம் துவங்க, சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள இ.பி.ஐ.பி., வளாகத்தில், 2.50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. கடந்த, 2022 -- 23 கல்வி ஆண்டில், ஒதுக்கிய இடத்தில், பயன்பாட்டில் இல்லாத ஒரு பழைய கட்டடத்தில் அந்த பயிற்சி நிலையம் துவங்கப்பட்டது.அங்கு, குளிர்சாதன டெக்னீசியன், மெக்கானிக், சர்வேயர், இன்-பளான்ட் லாஜிஸ்டிக்ஸ் அசிஸ்ட்டன்ட் ஆகிய நான்கு தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.கடந்த கல்வி ஆண்டின் துவக்கத்தில், பழைய கட்டடத்தை புதுப்பிக்கவும், ஒதுக்கிய இடத்தில் புதிய கட்டடம் நிறுவவும், 3.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், விலை உயர்ந்த எந்திரங்கள், கருவிகள், பயிற்சி பொருட்கள், பர்னீச்சர், ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினிகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களுக்காக, 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.தற்போது வரை உபகரணங்கள், கருவிகள் வரவில்லை, கட்டுமான பணிகளும் துவங்கவில்லை. அதனால், மின் விளக்கு வசதி இல்லாத பழைய வகுப்பறைகளில், இரு கல்வி ஆண்டுகளாக, அரசினர் ஐ.டி.ஐ., இயங்கி வருகிறது.அரசு அறிவித்த கவர்ச்சிகரமான சலுகைகளால், ஐ.டி.ஐ.,யில் சேர்ந்த மாணவ, மாணவியர், எந்த ஒரு அடிப்படை பயிற்சியும் பெற முடியாத பரிதாப நிலையில் தவித்து வருகின்றனர். இதனால், மாணவர்களும் பெற்றோர்களும் வேதனையில் உள்ளனர்.அலுவலக பணிகளுக்கு மட்டும் மின் வசதி ஏற்படுத்தப்பட்ட நிலையில், உடனடியாக வகுப்பறைகளுக்கு மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். ஒதுக்கிய நிதியில், உடனடியாக கட்டுமான பணிகளை துவங்க வேண்டும், உபகரணங்கள் மற்றும் பயிற்சிக்கான கருவிகள், எந்திரங்கள் வரவழைத்து முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.