கொசஸ்தலை ஆற்றில் உயர்மட்ட பாலம் ஆபத்தான படகு பயணத்திற்கு குட்பை பருவமழைக்கு முன் பணி முடிக்க திட்டம்
மீஞ்சூர்:மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பாரெட்டிப்பாளையம், பள்ளிபுரம், வேப்பம்கொண்ட ரெட்டிபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தோர், அங்குள்ள கொசஸ்தலை ஆற்றை கடந்து கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.ஆற்றை கடக்க சேதமான தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, தரைப்பாலம் மூழ்கி, மேற்கண்ட கிராமங்களின் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிக்கும்.ஒரு மாதத்திற்கு தரைப்பாலம் மூழ்கி கிடக்கும் நிலையில், அதுவரை கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக, ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்வதால், கிராமவாசிகளின் நீண்ட கால கோரிக்கையின் பயனாக, தரைப்பாலத்திற்கு மாற்றாக, ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்தாண்டு துவங்கப்பட்டது.நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், 16.50 கோடி ரூபாயில், இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஆற்றில், 10 துாண்கள் அமைத்து, அதன் மீது, 200 மீ., நீளம், 10 மீ., அகலத்தில் ஓடுபாதை அமைக்கப்படுகிறது.துாண்களின் மீது ஓடுபாதை, பக்கவாட்டு தடுப்புச்சுவர் உள்ளிட்ட பணிகள், தற்போது விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், பால பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது.'நடப்பாண்டு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டால், நிச்சயம் படகு பயணம் இருக்காது' என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், கிராமவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.