| ADDED : நவ 28, 2025 03:39 AM
கடம்பத்துார்: சத்தரை பகுதியில் தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், உயர்மட்ட மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டஞ்சேரி. இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், மப்பேடு - கொண்டஞ்சேரி இடையே சத்தரை பகுதியில் சத்தரை ஏரிக்கு வரும் நீர் வரத்து கால்வாய் பகுதியில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தில் மழை நேரங்களில் வெள்ளநீர் வரும்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் 3.50 கோடி ரூபாயில், 36 மீட்டர் நீளத்தில், 12.95 மீட்டர் அகலத்தில், புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் துவங்கியது. அதன்பின் கடந்த இரு மாதங்களாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.