உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலை விரிவாக்க பணி மூன்று மாதத்தில் முடிக்க திட்டம்

நெடுஞ்சாலை விரிவாக்க பணி மூன்று மாதத்தில் முடிக்க திட்டம்

திருத்தணி:திருத்தணியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்க, 7.30 கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள், அடுத்த மாதம் துவங்கி, மூன்று மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருத்தணி நெடுஞ்சாலை துறை வருவாய் கோட்டத்தில், மொத்தம் 220 கி.மீ., நெடுஞ்சாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒன்றிய பகுதிகளில் செல்லும் மாநில நெடுஞ்சாலை குறுகியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகளவில் நடந்து வருகின்றன. இதை தவிர்க்கும் வகையில், முதற்கட்டமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலைகளை விரிவுபடுத்த திட்டமிட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து, 7.30 கோடி ரூபாய் பெற்று, விரைவில் 'டெண்டர்' விடப்பட்டு பணிகள் துவக்கப்பட உள்ளன. இதுகுறித்து, திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது: ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டம், 2025 - 26ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 3.30 கோடி ரூபாயில் திருத்தணி - மின்னல் சாலையில், 2.5 கி.மீ., மற்றும் சிறுகுமி சாலையில் 2 கி.மீ., விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மேலும், காவேரிராஜபுரம் நெடுஞ்சாலை, 1.50 கோடி ரூபாயில், 1 கி.மீ., என, மொத்தம் 5.50 கி.மீ., 7.30 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது, 3.75 மீட்டர் அகலம் உள்ள சாலை, 5.50 மீட்டர் அகலமாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதுதவிர, 15 சிறுபாலங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ளன. இப்பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, அடுத்த மாதம் பணிகள் துவங்கி, மூன்று மாதத்திற்குள் முடிக்கப்படும். இச்சாலை விரிவாக்கத்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் வி பத்துகள் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ