கலைத் திருவிழாவில் 2ம் இடம் பிடித்த கே.ஜி.கண்டிகை அரசு பள்ளி மாணவர்கள்
திருத்தணி: தமிழக பள்ளிக் கல்வித் துறை மாணவர்களின் தனித்திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கும், நடைமுறையில் உள்ள கலை மரபுகள் பற்றி கற்பிக்கவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளன.புத்தக கல்வியோடு தங்களது தனித்திறமைகளையும் மேம்படுத்திக் கொள்ளவும், அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா நடத்தி வருகிறது.அந்த வகையில், இரு மாதங்களாக முதற்கட்டமாக பள்ளிகள் அளவிலும், ஒன்றியம், மாவட்டம் அளவிலும் கலைத் திருவிழா போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்றனர்.இதில், மொத்தம், 620 பள்ளிகளில் இருந்து, 2,519 மாணவர்கள் பங்கேற்றனர்.திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து, 298 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 29 மாணவ குழுக்கள் வெற்றி பெற்றன.இதில், திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், தெருக்கூத்து போட்டியில் மாநில அளவில், இரண்டாம் இடம் பிடித்தனர்.இந்நிலையில், நேற்று, தெருக்கூத்தில், இரண்டாமிடம் பிடித்த மாணவர்களை, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் நேரில் வரவழைத்து பாராட்டி, நினைவு பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் குப்பமாள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.