மேலும் செய்திகள்
விளாச்சேரியில் தயாராகும் மெகா அகல் விளக்குகள்
03-Nov-2025
திருவள்ளூர்: அடுத்த மாதம் திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், மண் தட்டுப்பாடு, இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் அகல் விளக்குக்கு மவுசு அதிகரித்துள்ளதால், கையால் தயாரிக்கும் அகல் விளக்கிற்கு வரவேற்பு குறைந்துள்ளது. இதனால், மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்து உள்ளனர். டிச., 3ம் தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அந்நாளில் கோவில்கள் மற்றும் வீடுகள் தீபங்களால் ஜொலிக்கும். இதற்காக பொதுமக்கள், மண் விளக்குகளை அதிகளவில் வாங்கி, வீடு மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றுவது வழக்கம். தீபத் திருநாள் நெருங்கி வரும் நிலையில், திருவள்ளூர் நகரில் முகமது அலி தெரு, சேலை, காக்களூர் மற்றும் பெரியபாளையம், ஆரணி, கும்மிடிப்பூண்டி, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இப்பகுதிகளைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள், உள்ளூரில் கிடைக்கும் மண் ஆதாரங்களை தவிர, குளத்தில் மண் எடுப்பது வழக்கம். தற்போது, மாவட்டம் முழுதும் பெய்து வரும் மழையால், ஏரிகளில் நீர் நிரம்பி, மண் எடுக்க முடியாத நிலை உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் முழுதும் வண்டல் மண்ணுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் தொழிலை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து, திருவள்ளூர் மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு சில இடங்களில் மட்டுமே, தற்போது மண்பாண்டம் மற்றும் அகல் விளக்கு தயார் செய்யப்படுகிறது. லாபம் மிகவும் குறைவாகவே கிடைப்பதால், பலரும் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். ஆண்டுதோறும் அதிகளவில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள், சில ஆண்டுகளாக உற்பத்தி குறைந்து, தற்போது கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும், பூ வேலைப்பாடு கொண்ட அகல் விளக்குகளுக்கு மவுசு கூடியதால், கைகளால் செய்யப்படும் அகல் விளக்குகளின் விற்பனை சரிந்து வருகிறது. இதனால், அக்டோபர், நவம்பர் மாதத்தில், 'பிசி'யாக இருக்க வேண்டிய நாங்கள், வேலையின்றி தவித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
03-Nov-2025