இனிப்பு, காரம் தயாரிப்போர் உரிமம் பெறுவது கட்டாயம்
திருவள்ளூர், பண்டிகை கால இனிப்பு, கார வகை தயாரிப்போர், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.திருவள்ளுர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ஆயத பூஜை, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்குவது வழக்கம். மேலும் தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்களை, தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்த கூடாது.பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக https://foscos.fssai.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும். உணவு தொடர்பான புகார் குறித்து, 94440 42322 என்ற 'வாட்ஸாப்' எண்ணிற்கும் gmail.comஎன்ற இ-மெயிலிலும் தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.