இடிதாக்கி மின்மாற்றி சேதம்: அதிகாரிகள் அலட்சியம் கருகும் பயிர்கள்... கண்ணீர் விடும் விவசாயிகள்
பொன்னேரி: சோழவரம் அருகே இடி தாக்கி சேதமடைந்த மின்மாற்றியை மாற்றுவதில் மின்வாரியம் அலட்சியம் காட்டுவதால், நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், அவை கருகி வருவதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சோழவரம் வேளாண் வட்டாரத்தில், 15,000 ஏக்கர் பரப்பில், சம்பா பருவத்திற்கு நெல் பயிரிப்பட்டுள்ளது. இம்மாத துவக்கத்தில் பெய்த கனமழையின் காரணமாக, இனாம் அகரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த மின்மாற்றி சேதமடைந்தது. இது, 200 கிலோவாட் திறன் கொண்டது. மழை விட்டு, 20 நாட்களான நிலையில், சேதமடைந்த மின்மாற்றி இதுவரை மாற்றப்படாமல் உள்ளது. இதனால், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், நெற்பயிர்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன. தண்ணீரின்றி விளைநிலங்கள் வெடித்துள்ளன. மேலும், நெற்பயிர்கள் கருகி வருகின்றன. விவசாயத்தையே நம்பி வாழ்வாதாரத்தை காக்கும் நிலையில், நெற்பயிர்கள் பாதித்து வருவதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: இனாம் அகரம் கிராமத்தில் சேதமான மின்மாற்றியில், 18 விவசாய மோட்டார்கள் மூலம், 200 ஏக்கர் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வந்தது. கடந்த 20 நாட்களாக மின்சாரம் இல்லாமல் ஆழ்துளை கிணறுகள் செயலிழந்து கிடக்கின்றன. நெற்பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. பஞ்செட்டி துணை மின்நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அலைகழிக்கின்றனர். மழையின்போது, மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்கள் தயார் நிலையில் இருப்பதாக, மின்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், இடி தாக்கி சேதமடைந்த மின்மாற்றி மாற்றப்படாமல் உள்ளது. நெற்பயிர்கள் கதிர்விடும் பருவத்தில் உள்ளதால், ஓரிரு நாட்களில் மின்மாற்றி பொருத்தாவிட்டால், மொத்தமும் கருகி பாழாகும். இதனால், ஒவ்வொரு விவசாயியும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, உடனே இடி தாக்கி சேதமடைந்த மின்மாற்றிக்கு மாற்றாக, அதே திறன் கொண்டதை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜெகன்னாதபுரத்திலும் பாதிப்பு
இனாம் அகரம் கிராமத்தின் அருகில் உள்ள ஜெகன்னதாபுரம் குடியிருப்பு பகுதியிலும், மழையின்போது இடி தாக்கி, 200 கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றி சேதமடைந்தது. அங்கும், இதுவரை புதிய மின்மாற்றி மாற்றப்படவில்லை. வேறு பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்த குடியிருப்புகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இதனால், குறைந்த மின்னழுத்தம், அடிக்கடி மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளால், 300க்கும் மேற்கண்ட குடியிருப்புளில் வசிக்கும் கிராம மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.