உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாதவரம் ரெட்டேரி ரூ.43 கோடியில் மேம்பாடு 3 மடங்கு தண்ணீரை சேமிக்க முடியும்

மாதவரம் ரெட்டேரி ரூ.43 கோடியில் மேம்பாடு 3 மடங்கு தண்ணீரை சேமிக்க முடியும்

மாதவரம்,:மாதவரம் ரெட்டேரி, 43 கோடி ரூபாயில் துார் வாரி சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. வழக்கமாக 32 மில்லியன் கனஅடி நீர் தேக்கும் நிலையில், இப்பணி முடிந்தால், 100 மில்லியன் கன அடி நீரை சேமிக்க முடியும் என, நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்தனர்.

தனியார் ஆக்கிரமிப்பு

சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்தில், நிலத்தடி நீர் ஆதாரம் மற்றும் சென்னை குடிநீர் தேவைக்காக உதவும் ரெட்டேரி உள்ளது.கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், 520 ஏக்கர் அளவில் இருந்தாக கூறப்படும் இந்த ரெட்டேரி, நாளடைவில் தனியார் ஆக்கிரமிப்புகளில் சிக்கியது. அதில், பல ஏக்கர், பல்வேறு கட்டடங்களாக மாறியது.அதனால், தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பக்கத்தில், கதிர்வேடு, லட்சுமிபுரம், விநாயகபுரத்தையொட்டி, 260 ஏக்கராகவும், மறுபக்கம் புழல் எம்.ஜி.ஆர்., நகரையொட்டி, 60 ஏக்கர் என, 320 ஏக்கர் மட்டுமே, இப்போது ஏரியாக உள்ளதாக, வருவாய்த் துறை பதிவேட்டில் உள்ளது. ஏரியின் பரப்பளவு சுருங்கியதால், வடகிழக்கு பருவமழையால் நேரடியாக கிடைக்கும் நீரும், அம்பத்துார், கொரட்டூர் ஏரிகளில் இருந்து வெளியேறி, வடிகால் வழியாக கிடைக்கும் நீரும், ரெட்டேரியில் சேமிக்க வழியின்றி, எண்ணுார் கடலுக்கு சென்று வீணாகிறது.மேலும், லட்சுமிபுரம் கலங்கல் வழியாக வெளியேறும் நீரால், மாதவரம் பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகர் சுற்று வட்டாரங்கள், வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்படுவதும் நடக்கிறது.அதனால், இந்த ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும். புதிதாக ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க, ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என, மாதவரம் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட, பல்வேறு பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.இந்நிலையில், 2015ல், அன்றைய முதல்வர் ஜெயலலிதா, மாதவரம், அம்பத்துார், கொரட்டூர் ஏரிகளை, 85 கோடி ரூபாய் செலவில் சுற்றுலா தலமாக்க மேம்படுத்த உத்தரவிட்டு, அதற்கான பணியையும் துவக்கி வைத்தார்.அதற்காக, முதற்கட்டமாக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதே ஆண்டு மார்ச் மாதம் பணிகள் துவங்கின.

அறிக்கை

ஆனால், மூன்று ஏரிகளிலும் கரைகள் அமைக்கும் பணிகள் மட்டுமே நடந்தன. பின், ஏரிகள் மேம்படுத்தப்படும் என, ஆட்சியாளர்களின் அறிக்கைகள் மட்டுமே தொடர்ந்தன.இந்த நிலையில், 43 கோடி ரூபாய் மதிப்பில், நீர்வள ஆதாரத் துறையின் வாயிலாக, மாதவரம் ரெட்டேரியை துார்வாரி மேம்படுத்தும் பணி, கடந்தாண்டு செப்டம்பரில் துவங்கியது.ஆனால், வடகிழக்கு பருவ மழை காரணமாக, அந்த பணி, ஓரிரு மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இந்த மாதம் முதல், அப்பணி மீண்டும் துவங்கி, வேகமெடுத்துள்ளது. வரும் ஆகஸ்டு அல்லது செப்டம்பரில், மேம்பாட்டு பணிகள் முடியும் என, அதிகாரிகள் கூறினர்.நீர்வள ஆதாரத்துறையினர் கூறியதாவது:தமிழக அரசின் நீர்நிலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாதவரம் ரெட்டேரியை மேம்படுத்தும் பணி, வேகமாக நடக்கிறது.முதற்கட்டமாக கதிர்வேடு, லட்சுமிபுரம் பகுதியில் இருக்கும் ரெட்டேரியில், ஆங்காங்கே தேங்கியுள்ள நீரை ஒன்றாக சேர்த்து, மோட்டார் வைத்து பம்ப் செய்து, புழல் பகுதி வடிகாலில் விடப்படுகிறது.இப்பணி முடிந்ததும், ஏரியில் 5 முதல், 6 அடி ஆழம் வரை துார் வாரப்படும். தற்போதுள்ள கரையுடன், 3 அடி வரை உயர்த்தப்பட்டு பலப்படுத்தப்படும்.மேலும், லட்சுமிபுரம், முதல், கதிர்வேடு உபரிநீர் வடிகால் சந்திப்பு வரை, புதிதாக கரைகள் அமைக்கப்படும்.தற்போது ஏரியில், 32 மில்லியன் கன அடி நீர் சேமிக்கும் வகையில் உள்ளது. துார் வாரியதும் 100 மில்லியன் கன அடி நீரை தேக்க முடியும். அதனால், நீராதாரம் அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி