உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சு தீர்வு எட்டாததால் மீண்டும் கூட்டம்

மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சு தீர்வு எட்டாததால் மீண்டும் கூட்டம்

பொன்னேரி:பழவேற்காடு மீனவ கிராமத்தில் கூனங்குப்பம், திருமலை நகர், செம்பாசிபள்ளி, நடுகுப்பம், லைட்அவுஸ்குப்பம், அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், சாட்டன்குப்பம், பசியாவரம் மற்றும் கோரைகுப்பம் ஆகிய மீனவ கிராமங்கள், கடலில் மீன்பிடி தொழில் செய்கின்றன.மீனவர்கள் சுருக்குமடி, மாப்பு என, பல்வேறு வகையான வலைகளை பயன்படுத்துகின்றனர். இதில், மாப்பு வலையை பயன்படுத்துவதால், மீன் கூட்டம் கலைந்துவிடுவதாகவும், தொழில் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.இதை அனைத்து மீனவ கிராமங்களும் பயன்படுத்த வேண்டாம் என, மீனவர்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக் கொண்டனர். அதே சமயம், கோரைகுப்பம் மீனவ கிராமத்தினர் பல தலைமுறைகளாக இந்த வலையை மட்டுமே பயன்படுத்தி தொழில் செய்து வருகின்றனர். தொடர்ந்து அந்த வலையை பயன்படுத்தினர்.கோரைகுப்பம் கிராம மீனவர்கள் பயன்படுத்தும் மாப்பு வலையால் மீன்வளம் பாதிப்பதாக கூறி, மற்ற கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்னை ஏற்பட்டது. கோரைகுப்பம் மீனவர்கள், தாங்கள் பயன்படுத்தும் மாப்பு வலைக்கு தடை இல்லை எனக்கூறி, தொடர்ந்து அந்த வலையை பயன்படுத்தினர்.கடந்த மாதம் 27ம் தேதி கடலில் மாப்பு வலையை பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த கோரைகுப்பம் மீனவர்களிடம், மற்ற மீனவ கிராமத்தினர் தகராறு செய்து, மாப்பு வலைகளை அறுத்து சேதப்படுத்தினர்.இதுகுறித்து கோரைகுப்பம் மீனவர்கள், பொன்னேரி ஆர்.டி.ஓ., கனிமொழியிடம் புகார் தெரிவித்தனர். மீன்வளத்துறை வாயிலாக உரிய தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. நேற்று, பழவேற்காடு கடலோர அனைத்து மீனவ கிராமங்களின் நிர்வாகிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.பொன்னேரி தாசில்தார் சோமசுந்தரம் தலைமையில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் மற்றும் காவல்துறையினர், மீனவர்களின் மீன்பிடி தொழில் தொடர்பான பிரச்னை குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.இந்த கூட்டத்தில், கோரைகுப்பம் மற்றும் மற்ற மீனவ கிராம நிர்வாகிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். மாப்பு வலைகளை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்களுக்கு ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.இதையடுத்து, 10 நாட்களுக்கு தற்காலிகமாக மாப்பு வலையை அனைத்து மீனவ கிராமத்தினரும் பயன்படுத்த வேண்டாம் எனவும், மீனவர்களுக்குள் ஒருமித்த கருத்து ஏற்பட, மீண்டும் 10 நாட்களில் பேச்சுவார்தை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதுவரை மீனவர்கள் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை