திருவள்ளூர்: திருவள்ளூர் ஆயில் மில் அருகே, ஜே.என்.சாலையில் இருந்து பூங்கா நகர் பிரியும் இடத்தில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவள்ளூர் ஜே.என்.சாலையில், ஆயில்மில் நிறுத்தம் அருகில், தனியார் திருமண மண்டபம் எதிரில், பூங்கா நகருக்கு செல்லும் சாலை பிரிகிறது. பூங்கா நகர், ராஜாஜிபுரம், என்.ஜி.ஜி.ஓ., காலனி உள்ளிட்ட பகுதியில் வசிக்கும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கல்வி, வேலை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக, இந்திராகாந்தி சாலை வழியாக ஜே.என்.சாலையை கடந்து செல்கின்றனர். திருவள்ளூர் பேருந்து நிலைய பகுதியில் இருந்து ரயில் நிலையம், மணவாளநகர் செல்லும் வாகனங்கள், அதிக வேகத்தில் வருகின்றன. அதே போல், எதிர்திசையில் வரும் வாகன ஓட்டிகள், பூங்கா நகர் பகுதிக்கு செல்ல, தனியார் திருமண மண்டபம் எதிரில், சாலை பிரியும் இடத்தில், நின்று செல்கின்றனர். இருமுனையிலும் வேகமாக வரும் வாகனங்களால், பூங்கா நகர் சென்று வரும் மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். இந்த இடத்தில், சாலையின் இரு முனையிலும் வேகத்தடை அமைத்தால், வேகமாக வரும் வாகனங்கள், வேகம் குறைந்து செல்லும். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர், வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென,வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.