| ADDED : பிப் 20, 2024 12:30 AM
சென்னை:சென்னையில், 17.47 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஒலிம்பிக் அகாடமியை, அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். அறிவியல் மையம்
சென்னை வேப்பேரியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில், 17.47 கோடி ரூபாய் செலவில், ஒலிம்பிக் அகாடமிக்காக கட்டப்பட்ட மூன்றடுக்கு கட்டடத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார். இதன் தரைதளத்தில் பல்நோக்கு விளையாட்டு தளம்; முதல் தளத்தில், டேக்வாண்டோ, ஜுடோ விளையாட்டு தளம்; இரண்டாவது தளத்தில் வாள்வீச்சு தளம்; மூன்றாம் தளத்தில் விளையாட்டு அறிவியல் மையம் போன்றவை செயல்பட உள்ளன.மேலும், விளையாட்டு வீரர்களின் சான்றிதழ்களை டிஜி லாக்கர் இணையத்தில் சேமிக்கும் வசதி உள்ளிட்டவற்றுடன், விளையாட்டு துறைக்கான மேம்படுத்தப்பட்ட 'www.sdat.tn.gov.in' இணையதளத்தையும் திறந்து வைத்தார். பின், உதயநிதி அளித்த பேட்டி:ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கங்களைகுவிக்கும் வகையில் பயிற்சிஅளிக்க, சென்னையில் ஒலிம்பிக் அகாடமி திறக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை, திருச்சி, நீலகிரி மாவட்டங்களிலும் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும். நிலம் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பொறுப்பை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,விடம் ஒப்படைத்துள்ளோம்; விரைவில் பணிகள் துவங்கும். பார்முலா ரேஸ் போட்டியை, விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பு அம்சங்களுடன் நடத்த உள்ளோம். அதற்கு விளம்பரதாரர்களின் வாயிலாக நிதி திரட்ட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.