மணவாளநகரில் வரும் 23ல் அங்கக வேளாண் கருத்தரங்கு
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: உணவு உற்பத்திக்காக, தொடர்ச்சியாக ரசாயன உரம் பயன்படுத்தி வந்ததன் காரணமாக, மண் மற்றும் சுற்றுச்சுழல் மாசடைகிறது. எனவே, நஞ்சற்ற உணவை பெற மீண்டும் பாரம்பரிய இயற்கை அங்கக வேளாண்மையை நாட வேண்டியுள்ளது. அங்கக வேளாண்மை என்பது செயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்துகளை தவிர்த்து, இயற்கை சார்ந்த உரம் மற்றும் பொருட்களை பயன்படுத்தி, மண் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் விவசாயம் செய்யும் முறை. அதன்படி, அங்கக வேளாண்மை பற்றி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, வரும் 23ம் தேதி மணவாளநகர், சி.எம்.பேலஸ் திருமண மண்டபத்தில், வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள அங்கக வேளாண்மை ரகங்களை காட்சிப்படுத்துதல், வேளாண் பல்கலைக்கழகம் வாயிலாக கண்காட்சி அமைத்தல் மற்றும் கலந்துரையா டல் நடைபெற உள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள், கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.