பழுதடைந்த அரசு பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற பெற்றோர் எதிர்பார்ப்பு
திருத்தணி:திருத்தணி நகராட்சி, முருகப்ப நகர் பகுதியில், அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 80க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடம் முறையாக பராமரிக்காததால் பழுதடைந்தது.வகுப்பறை கட்டடத்தின் மேல்தளம் பெயர்ந்து விழுந்ததால், ஒரு ஆண்டுக்கு மேலாக அந்த கட்டடத்தை பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டுள்ளன. மேலும் பழுதடைந்த கட்டடம் இடிக்கவும் தீர்மானிக்கப்பட்டு, அந்த கட்டடம் அருகே மாணவர்கள் செல்லாத வண்ணம் கயிறு கட்டியுள்ளன.இருப்பினும், மதிய உணவு இடைவேளையின் போது, பழுதடைந்த கட்டடம் அருகே விளையாடுகின்றனர். இதனால், விபத்து அபாயம் உள்ளதால், பள்ளிக் கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து, திருத்தணி நகராட்சி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த மார்ச் மாதம் முன் வரை முருகப்ப நகர் அரசு நடுநிலைப் பள்ளியை திருத்தணி ஒன்றிய நிர்வாகம் பராமரித்து வந்தது. அதன் பின் தான் நகராட்சியில் உள்ள பள்ளிகளை, எங்கள் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளன. விரைவில், பழுதடைந்த கட்டடம் இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.