உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புறநகர் ரயில்களில் மாணவர்கள் சேட்டை கண்காணிப்பு இல்லாமல் பயணியர் தவிப்பு

புறநகர் ரயில்களில் மாணவர்கள் சேட்டை கண்காணிப்பு இல்லாமல் பயணியர் தவிப்பு

பொன்னேரி:சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், தினமும், 80க்கும் அதிகமான புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணியர் பணி தொடர்பாக சென்னை சென்று வருகின்றனர். இதில், காலை, மாலை நேரங்களில், சென்னையில் உள்ள கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர். இவர்கள் மொபைல் போனில் அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்பதும், கேம் விளையாடுவதும் தொடர்கிறது. இதனால் மற்ற பயணியருக்கு மிகுந்த இடையூறு ஏற்படுகிறது.பணி முடிந்து மாலை நேரங்களில் அசதியுடன் இருக்கும் பயணியர், கல்லுாரி மாணவர்களின் செய்கையால் எரிச்சல் அடைகின்றனர். இது குறித்து அவர்களிடம் கேட்டால், கூட்டமாக சேர்ந்து கொண்டு பயணியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் கண்காணிப்பு இல்லாததால், கல்லுாரி மாணவர்களின் சேட்டைகள் அதிகமாக இருக்கிறது. இவர்கள் அவ்வப்போது 'ரூட்தல யாரு' என்ற பிரச்னைகளையும் எழுப்பி, மோதிக்கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. சென்னை மெட்ரோ ரயில்களில் 'பிங்க் ' பறக்கும்படை என்ற பிரிவினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மொபைல் போனில் பாடல், சினிமா உள்ளிட்டவைகளை பார்ப்பவர்கள் அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல், ஹெ ட் செட் அல்லது புளுடூத் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.அதுபோன்று, புறநகர் ரயில்களிலும், ரயில்வே பாதுகாப்பு போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டு கல்லுாரி மாணவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ