பொன்னேரியில் குவிந்து கிடக்கும் வழக்கு வாகனங்களால் இடையூறு
பொன்னேரி:நீதிமன்றங்கள் அமைந்துள்ள வளாகம் அருகே, குவிந்து கிடக்கும் வழக்குவாகனங்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. பொன்னேரி தாலுக்கா அலுவலக சாலையில், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆகியவை அமைந்து உள்ளன. மேலும், கிளை சிறை, சப்-கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவையும் இருக்கின்றன. இவை அனைத்தும் அருகருகே உள்ள கட்டடங்களில் செயல்படுகின்றன. இந்த வளாகங்களுக்கு அருகில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இவை பல ஆண்டுகளாக இங்கேயே கிடப்பதால், துருப்பிடித்தும், செடி, கொடிகள் சூழ்ந்தும் இருக்கின்றன. நீதிமன்றங்கள், சப்-கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றிற்கு வரும் பொதுமக்களுக்கு இந்த வழக்கு வாகனங்கள் இடையூறாக இருக்கின்றன. பொதுமக்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு வழக்கு தொடர்புடையவர்களை அழைத்து வரும் போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமின்றி சிரமப்படுகின்றன. இவற்றை இங்கிருந்து அப்புறப்படுத்தினால், மக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு கூடுதல் இடவசதி கிடைக்கும். எனவே, வழக்கு வாகனங்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.