| ADDED : நவ 27, 2025 03:26 AM
ஆர்.கே.பேட்டை: மண்புழு உரக்குடில், தற்போது பிளாஸ்டிக் குப்பை கொட்டும் இடமாக மா றியுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மட்கும் மற்றும் மட்காத குப்பைகள் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படுகிறது. துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் இந்த குப்பை, குப்பை கிடங்கில் மீண்டும் பிரித்தெடுக்கப்படுகிறது. மட்காத குப்பையில் இருந்து மறுசுழற்சி பொருட்கள் பிரிக்கப்படுகிறது. மட்கும் குப்பையில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. மண்புழு உரம் தயாரிப்பதற்காக, குப்பை கிடங்குகளில் மட்கும் குப்பை, மட்குவதற்காக மண்ணில் குழிகள் வெட்டப் பட்டுள்ளது. பின், அதையொட்டியுள்ள தொட்டிகளில் கொட்டி வைத்து மண்புழு வளர்க்கப்படுகிறது. இந்த கழிவு சிறந்த இயற்கை உரமாக பயன்படுகிறது. ஆனால், இந்த திட்டம் பல்வேறு ஊராட்சிகளில் கைவிடப்பட்டுள்ளது. இந்த கிடங்குகள் பாழடைந்து வருகின்றன. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சகஸ்ரபத்மாபுரம் ஊராட்சியின் மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்கில், கிராமத்தின் பிளாஸ்டிக் குப்பை ஒட்டுமொத்தமாக கொட்டப்பட்டு வருகிறது. இந்த பிளாஸ்டிக் குப்பை, அருகில் உள்ள வயல்களில் விழுவதால், பயிர்களும் பாதிக்கப் படுகின்றன. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, ஊராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.