உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரியில் சுத்திகரிப்பு நிலைய பணிகள் விறுவிறு!: 65 லட்சம் லிட்டர் கழிவுநீரை நன்னீராக்க திட்டம்

பொன்னேரியில் சுத்திகரிப்பு நிலைய பணிகள் விறுவிறு!: 65 லட்சம் லிட்டர் கழிவுநீரை நன்னீராக்க திட்டம்

பொன்னேரி: பொன்னேரி நகராட்சியில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை, தினமும், 65 லட்சம் லிட்டர் சுத்திகரித்து நன்னீராக்குவதற்கான சுத்திகரிப்பு நிலைய பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில், 27 வார்டுகளில், 69 கி.மீ, 237 தெருக்கள் உள்ளன. முதல்கட்டமாக, 54.78கோடி நிதியில், 41 கி.மீ., தொலைவிற்கு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 2019ல் பணிகள் துவங்கின.

சிமென்ட் உருளைகள்

தொடர்ந்து, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கண்ட திட்டப்பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டி, அதில் இரும்பு மற்றும் சிமென்ட் உருளைகள், 'மேன்ேஹால்கள்' ஆகியவை பொருத்தும் பணிகள் நடைபெற்றன.தற்போது பெரும்பாலான இடங்களில் குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளன. குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை, சேகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.இதற்காக வேண்பாக்கம், கள்ளுக்கடைமேடு, பழைய பேருந்து நிலையம், செங்குன்றம் சாலை ஆகிய இடங்களில் கழிவுநீர் சேகரிப்பு கீழ்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரித்து, அதிலுள்ள கசடுகளை அகற்றி, நன்னீராக மாற்றி, அதை ஆரணி ஆற்றில் விடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

கசடுகள்

இதற்கான சுத்திகரிப்பு நிலையம், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பெரியகாவணம் பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே அமைக்கப்படுகிறது.இங்கு, தினமும், 65 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் கட்டுமான பணி மேற்கொள்ளப்படுகிறது. கழிவுநீரை ஒவ்வொரு நிலையாக கசடுகளை பிரிப்பதற்கு ஏற்ப ராட்சத தொட்டிகள், பில்டர் அமைக்கப்பட்டு வருகிறது.தற்போது கட்டடங்களுக்கான கட்டுமான பணிகள் முடிந்து, குழாய்கள், ஏரியேட்டர், மோட்டார் உபகரணங்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, தொட்டிகளில் நிரப்பி கசிவுகள் உள்ளனவா என ஆய்வுப்பணியும் நடைபெற்று வருகிறது. சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றிலும் சுற்று சுவர் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்படுகிறது.சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படும் கழிவுநீரில், கல், மண், பிளாஸ்டிக் என திடக்கழிவுகள் இருக்கும். முதலில் அவற்றை தனியாக பிரித்து எடுக்கப்படும்.

ஏரியேட்டர்

அடுத்த நிலையில், கழிவுநீரில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் நச்சுக்களை, ரசாயனம் கலவை சேர்த்து ஏரியேட்டர் உபகரணங்கள் உதவியுடன் அழிக்கப்படும்.வட்ட வடிவில் உள்ள அமைக்கப்பட்டுள்ள தொட்டியில், தண்ணீர் தனியாகவும், கசடுகள் தனியாகவும் பிரியும். அதற்கான உபகரணங்களும் பொருத்தப்பட்டு வருகின்றன.அங்கு தெளிந்த நிலையில் கிடைக்கும் தண்ணீரை மற்றொரு தொட்டிக்கு கொண்டு சென்று, குளோரின் கலந்து, பின் ஆரணி ஆற்றில் கொண்டு சென்று விடப்படும்.வரும், ஜூலை மாதத்திற்குள் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு பணி நடைபெறுகிறது.சுத்திகரிப்பு நிலைய பணிகளுடன், பாதாள சாக்கடை திட்டத்தின் எஞ்சிய பணிகளையும் துரிதமாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி