பொன்னேரி ரயில் நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் கூரை அமைக்க கோரிக்கை
பொன்னேரி:பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணியர், பல்வேறு பணிகளுக்காக சென்னை, கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு, புறநகர் ரயில்கள் வாயிலாக பயணிக்கின்றனர்.பொன்னேரியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, இருசக்கர வாகனங்களில் ரயில் நிலையம் வரும் பயணியர், அங்குள்ள ரயில்வே வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துவிட்டு செல்கின்றனர்.இங்கு, இருசக்கர வாகனங்களுக்கு 250 ரூபாயும், மிதிவண்டிகளுக்கு 150 ரூபாயும் மாத கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே சமயம், இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது.வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிறிய அளவில், இரண்டு கூரைகள் மட்டுமே உள்ளன. அவையும் ஓட்டை உடைசலுடன் இருக்கின்றன. வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்படுவதால், மழை, வெயிலில் பாழாவதுடன், அவற்றின் நிறம் மங்கி போகிறது.இதனால், ஒரு சில பயணியர் தங்களது வாகனங்களை, ரயில் நிலையம் அருகே, வேண்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள மரங்களின் நிழல்களில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.எனவே, வாகன நிறுத்துமிடம் முழுதும் கூரைகள் அமைத்து, பாதுகாப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.