உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சம்பா நெல் நடவு பணி பொன்னேரியில் தீவிரம்

சம்பா நெல் நடவு பணி பொன்னேரியில் தீவிரம்

பொன்னேரி:பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், சம்பா பருவத்திற்கு, 32,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. தற்போது, சொர்ணவாரி பருவத்திற்கான அறுவடை பணிகள் முடிந்து, சம்பா பருவத்திற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விளைநிலங்களை உழுத பின் நேரடி நெல் விதைப்பு, நாற்றங்கால் வளர்த்து கைநடவு ஆகிய முறைகளை பின்பற்றி, விவசாய பணி நடைபெறுகிறது. நடவு பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறையால் , பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பிற்கு மாறி வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் இயந்திரத்தின் உதவியுடன் நடவு பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த இயந்திர நடவு முறையில், 1 ஏக்கர் பரப்பை, 40 - 50 நிமிடங்களில் முடிக்கின்றனர். இதனால், குறுகிய நேரத்தில் அதிக பரப்பில் நடவு பணிகளை மேற்கொள்ள முடிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, சின்னகாவணம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தாரகராமன் கூறியதாவது: இயந்திர நடவிற்காக, 15 நாட்களுக்கு முன், தட்டு நாற்றுகள் வளர்க்கப்படும். பின், நடவு செய்யப்படுகிறது. இது, சீரான இடைவெளியில் நடப்படுவதால், களை பணிகள் எளிதாக இருக்கிறது. ஒரு ஏக்கருக்கு, 5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நடவு பணிகளுக்கு ஆட்களை தேடி அலைய வேண்டிய தேவை இல்லை. ஒரே நாளில், 10 - 12 ஏக்கர் வரை நடவு செய்ய முடியும் என்பதால், இதில் ஆர்வம் காட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ