இரண்டு ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற புறநகர் ரயில்
திருவாலங்காடு:அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை, 6:40 மணியளவில் சென்னை சென்ட்ரல் நோக்கி புறநகர் ரயில் சென்றது. இந்த ரயில் அரக்கோணம் ----- சென்ட்ரல் வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.இந்நிலையில் அரக்கோணம் அடுத்துள்ள புளியமங்கலம், மோசூர் உள்ளிட்ட இரண்டு ரயில் நிலையத்தில் நேற்று நிற்காமல் சென்றது. இதனால் அந்த ரயில் நிலையங்களில் இறங்க வேண்டிய பயணியர் அதிருப்தி அடைந்து அபாய சங்கிலியை இழுத்தனர்.பின் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் டிரைவர் இருந்த பெட்டியை நோக்கி சென்ற பயணியர் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது டிரைவர் நான் புதிதாக இந்த மார்க்கத்தில் வந்துள்ளேன்.மேற்கண்ட ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும் என்பது குறித்து தெரியவில்லை என கூறி மன்னிப்பு கோரியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரயில் பயணியர் சென்றனர். பின் ரயில் சென்ட்ரல் நோக்கி இயக்கப்பட்டது.