திருவள்ளூர்:திருவள்ளூரில் நேற்று, தை அமாவாசைக்காக, வீரராகவர் கோவிலுக்கு குவிந்த கூட்டத்தால், நகரில் கடும் நெரிசல் நிலவியது.திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான தேரடியில், பிரசித்தி பெற்ற வீரராகவர் கோவில் உள்ளது. ஒவ்வொரு அமாவாசை நாட்களிலும், இந்த கோவிலுக்கு, தமிழகம் மற்றும் பிற மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, தரிசனம் செய்வது வழக்கம். மேலும், இங்குள்ள கோவில் குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, திதி கொடுப்பர்.ஆடி, புரட்டாசி மற்றும் தை ஆகிய அமாவாசை தினங்களில், கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். இந்த ஆண்டிற்கான தை அமாவாசை தினமான நேற்று, வழக்கத்தை விட, பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அவர்கள் வந்த வாகனங்களும், கூடுதலாக இருந்ததாலும், ஜே.என்.சாலை, உழவர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக கோவில் அமைந்துள்ள தேரடிக்கு செல்லும் சாலை குறுகலாக உள்ளது.இதன் காரணமாக, இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, ஜே.என்.சாலையின் இருபுறமும் மற்றும் ஆவடி 'பைபாஸ் சிக்னல்' அருகிலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். எனவே, அமாவாசை தினங்களில், கோவில் அருகில் வாகனங்கள் நிறுத்துவதையும், பக்தர்கள் வரும் வாகனங்களை, நகருக்கு வெளியில் நிறுத்த, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் விடுத்துள்ளனர்.