உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிளாஸ்டிக் கழிவு தின்று வண்டலுாரில் பலியான மான்கள்

பிளாஸ்டிக் கழிவு தின்று வண்டலுாரில் பலியான மான்கள்

வண்டலுார், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுாரில் உள்ள காப்புக்காட்டில் பிளாஸ்டிக் கழிவை தின்று மான்கள் இறக்கின்றன.செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுாரில் உள்ள காப்புக்காட்டில், 1,200க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. காப்புக் காட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி இல்லாததால், மான்கள் அவ்வப்போது வழி தவறி வெளியேறி, ஊருக்குள் வந்து விடுகின்றன. பின், வனத்துறை ஊழியர்கள் மீட்டு, மீண்டும் காப்புக் காட்டிற்குள் விடுவதும் வழக்கம்.காட்டிலிருந்து வெளியேறும் மான்களில் சில, வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவை உண்டு உயிரிழப்பதும் தொடர்கிறது.இந்நிலையில், வண்டலுார் குப்பைக் கிடங்கு அருகே, மூன்று புள்ளி மான்கள் இறந்து கிடப்பதாக, வனத்துறை ஊழியர்களுக்கு, நேற்று காலை தகவல் வந்தது.சம்பவ இடதிற்கு சென்ற ஊழியர்கள், உயிரிழந்த மூன்று மான்களின் உடல்களையும் மீட்டனர். பின், கால்நடை மருத்துவர்கள் வந்து, பிரேத பரிசோதனை செய்தனர்.அப்போது பிளாஸ்டிக் கையுறை, பிளாஸ்டிக் கயிறு, பிளாஸ்டிக் கழிவு மான்களின் இரைப்பைக்குள் இருந்தன.உயிரிழந்த மான்கள் மூன்றும் வயதானவை எனவும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்டதே இறப்பிற்கு காரணம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின், மான்களின் உடல்கள், வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டன.

!

இது குறித்து, வனத்துறை அலுவலர் கூறியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலுார், கூடலுார், ஊனமாஞ்சேரி மற்றும் குமுளி ஆகிய இடங்களில் உள்ள 2,930 ஹெக்டேர் பரப்பு காப்புக் காட்டிற்கு, மூன்று வனத்துறை ஊழியர்கள் மட்டுமே உள்ளனர்.இத்தனை பெரிய பரப்பிற்கு, குறைந்தபட்சம் 12 ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். காப்புக் காடுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி, மற்றும் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். பாதுகாப்பு வேலி இல்லாததால், வழி தவறி வெளியேறும் மான்கள் காப்புக் காட்டை ஒட்டியுள்ள பகுதியில் ஊராட்சி நிர்வாகங்களால் கொட்டப்படும் குப்பை கழிவை உண்டு வாழ்கின்றன. அதில் உள்ள பிளாஸ்டிக் கழிவால் உயிரிழக்கின்றன. எனவே, காடுகளின் ஓரத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்; தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை