| ADDED : ஜன 27, 2024 11:33 PM
திருவள்ளூர், திருமழிசையில் அமைந்துள்ள ஜெகந்நாத பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் கோவிலில் திரு அவதார மகோற்சவ திருவிழா, கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழாவில் உற்சவர் ஜெகந்நாத பெருமாள் காலை, மாலை இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள் பாலித்தார்.முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 7:00 மணியளவில் தேரில் திருமழிசை ஆழ்வார் எழுந்தருளினார்.காலை 9:00 மணிக்கு பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி, பயபக்தியுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். பெண்கள் பாடல் பாடி கோலாட்டம் ஆடியபடி சென்றனர்.நான்கு வீதிகள் வழியாக வலம் வந்த தேர், மதியம் 12:30 மணியளவில் கோவிலை வந்தடைந்தது.விழாவில் பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், பேரூராட்சி தலைவர் வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வெள்ளவேடு போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட மாடவீதிகளில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் திறந்த வெளியில் இருந்தது. இது தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களிடையே முகம் சுழிக்க வைத்தது.மேலும், மாடவீதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் தேரோட்டத்திற்கு இடையூறாக சாய்ந்த நிலையில் இருந்தன. இதனால் பக்தர்கள் கடும் அச்சத்துடன் தேரை இழுத்து வந்தனர்.எனவே, வருங்காலங்களில் மின்கம்பங்களை மாற்றியமைக்கவும், திறந்த வெளியில் உள்ள கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.