திருமழிசை பேரூராட்சி வாக்குசாவடி ஆய்வு
திருமழிசை:திருமழிசை பேரூராட்சி தி.மு.க., தலைவர் வடிவேல், 65. இவர் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி உறவினருடன் காரில் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த செங்காடு சென்று திரும்பியபோது கார் மண்ணுார் பகுதியில் சாலையில் உள்ள மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வடிவேல் 16ம் தேதி இறந்தார்.இதையடுத்து அவர் போட்டியிட்ட 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்த அரசு உத்தரவிட்டு தேர்தல் அலுவலராக பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் நேற்று திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் திருமழிசை பேரூராட்சியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான பிரையாம்பத்து பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். ஆய்வின் போது திருமழிசை பேரூராட்சி தலைவர் வெங்கேடசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.