உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்:புகார் பெட்டி;சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் அவஸ்தை

திருவள்ளூர்:புகார் பெட்டி;சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் அவஸ்தை

சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் அவஸ்தை

திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கிராமத்திற்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம், மர்ம நபர்கள் சிலர் குப்பையை கொட்டிவிட்டு செல்கின்றனர்.இதை ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்றாமல், குப்பைக்கு தீ வைத்து எரிக்கின்றனர். அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைக்கு தீ வைப்பதால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் புகை மற்றும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, பலமுறை வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.பழனி, வேலஞ்சேரி.

தெருக்களில் வளரும் செடிகள் தஞ்சமடையும் விஷ ஜந்துக்கள்

ஊத்துக்கோட்டை பேரூராட்சி, முனீஸ்வரன் கோவில் தெருவில் குடியிருப்புகள் உள்ளன. கடந்தாண்டு இப்பகுதிகளில் 'பேவர் பிளாக்' கற்களால் சாலை அமைக்கப்பட்டது.தற்போது, இந்த சாலையில் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், இதன் உறுதித்தன்மை பாதிப்படைந்து, தெருக்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறி வருகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தெருக்களில் வளர்ந்துள்ள புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.வி.ராமகிருஷ்ணன், ஊத்துக்கோட்டை.

ஜி.என்.டி., சாலையோரம் குப்பை குவித்து எரிப்பு

கும்மிடிப்பூண்டி நகரை ஒட்டியுள்ள தேர்வழி, பெத்திக்குப்பம் ஆகிய இரு ஊராட்சிகளில், 30க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இரு ஊராட்சிகளிலும் போதிய அளவில் துாய்மை பணியாளர்கள் இல்லாததால், இங்கு சேகராகும் குப்பை, ஜி.என்.டி., சாலையோரம் மக்கள் வீசி செல்கின்றனர்.அப்படி குவிக்கப்படும் குப்பையை, ஊராட்சி பணியாளர்கள் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால், மக்களின் சுகாதாரம் பாதிப்பதுடன், குப்பை குவியலால் ஜி.என்.டி., சாலை முழுதும் பொலிவிழந்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளை கணக்கில் கொண்டு, இரு ஊராட்சிகளிலும் போதிய துாய்மை பணியாளர்களை நியமித்து கழிவு மேலாண்மையை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.கமலநாதன், கும்மிடிப்பூண்டி.

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?

ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியில் சாலையோர கடைகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளன. சாலையோரம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இந்த கடைகளுக்கு வரும் நபர்கள், சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால், பொன்னியம்மன் கோவில் சந்திப்பில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறைக்கு உரிய இடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எல்.நாராயணசாமி, ஆர்.கே.பேட்டை.

எரியாத தெருவிளக்குகளால் மணவாளநகர் வாசிகள் அவதி

கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாளநகர் மற்றும் கபிலர் நகர் அழகிரி தெரு, லெனின் தெரு, புத்தர் தெரு உட்பட பல தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் உள்ள விளக்குகள், 10 நாட்களாக எரியவில்லை.இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், இரவு நேரங்களில் பகுதிவாசிகள் தெருவில் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணவாளநகர் பகுதியில் தெரு மின் விளக்குகளை ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜேஷ், மணவாள நகர்.

நெடுஞ்சாலையோரம் குப்பை வாகன ஓட்டிகள் முகம்சுளிப்பு

கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது ஒண்டிக்குப்பம். இப்பகுதியில் உள்ள திருமழிசை செல்லும் நெடுஞ்சாலையோரம் குப்பை அகற்றப்படாமல் குவிந்து வருகிறது.இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், முறையாக அகற்றப்படுவதில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் மற்றும் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுத்து, முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுரேஷ், மணவாள நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்