திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை நூலகங்களிலும், குறிப்புகளை பிரதி எடுக்கவும், உயர் கல்வி பயிலவும் ஜெராக்ஸ் மற்றும் இன்டர்நெட் வசதி செய்து கொடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளி கல்வித் துறையின்கீழ், ஒரு மாவட்ட மைய நூலகம், 65 கிளை நூலகங்கள், 46 ஊர்ப்புற நூலகங்கள், 15 பகுதி நேர நூலகங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 65 கிளை நூலகங்களில், 58 நூலகங்கள் சொந்த கட்டடத்திலும், 5 நூலகங்கள் வாடகையின்றி இலவச கட்டடங்களிலும், 2 நூலகங்கள் வாடகை கட்டடத்திலும் இயங்கி வருகிறது.மாவட்டம் மற்றும் தாலுகா பகுதிகளில் உள்ள நூலகங்கள், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், கிளை நூலகங்கள் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 6.30 மணி வரையும், கிராம நூலகங்கள், காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் இயங்கி வருகின்றன.
இன்டர்நெட் வசதி: புத்தகத்தில் உள்ள குறிப்புகளை பிரதி எடுக்க வசதியாக, இன்டர்நெட் பிரவுசிங் வசதி, மாவட்ட மைய நூலகம், பொன்னேரி, மணவாளநகர், திருத்தணி, பள்ளிப்பட்டு, அம்பத்தூர், திருவொற்றியூர் ஆகிய நூலகங்களில் உள்ளது. மேலும், ஜெராக்ஸ் வசதி, மாவட்ட மைய நூலகம், அம்பத்தூர், மணவாளநகர், கும்மிடிப்பூண்டி, வளசரவாக்கம், திருத்தணி, பொதட்டூர்பேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளில் உள்ள நூலகங்களில் உள்ளன. இது உயர் கல்வி பயிலும் வாசகர்களுக்கு, பெரிதும் உதவியாக உள்ளது.வகுப்பறை நூலகம்: மாணவர் பருவத்திலேயே படிக்கும் பழக்கம் உண்டாக்க, பொது நூலகத்துறை 'வகுப்பறை நூலகம்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், 100 புத்தகங்கள் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு மாதத்துக்கு இரண்டு நாள் சுழற்சி முறையில் கொண்டு செல்லப்பட்டு, வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம், 86 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 43 ஆயிரத்து, 112 மாணவ, மாணவியர் பயனடைந்து உள்ளனர்.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் கல்வி பயிலும் வாசகர்கள் வசதிக்கான புத்தகங்கள், மாவட்ட மைய நூலகம், அம்பத்தூர், திருவொற்றியூர், கத்திவாக்கம், ஆரணி, பொன்னேரி, செங்குன்றம், வளசரவாக்கம், அத்திமாஞ்சேரிபேட்டை, மணவாளநகர், மீஞ்சூர், பொதட்டூர்பேட்டை, திருத்தணி ஆகிய நூலகங்களில் மட்டும் உள்ளது.கிராமப்புற வாசகர்கள், உயர் கல்விக்கான புத்தகங்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களிலும், இந்த வசதிகளை ஏற்படுத்தித் தர, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் இன்டர்நெட், ஜெராக்ஸ் வசதியுடன், 8 நூலகங்கள் மட்டுமே உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள மற்ற நூலகங்களில் இந்த வசதி இல்லைஇதுகுறித்து, கிளை நூலகர் ஒருவர் கூறும் போது, ''கிராமங்களில் உள்ள கிளை நூலகங்களில் ஜெராக்ஸ் மற்றும் இன்டர்நெட் வசதியும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் கல்வியை, கிராம வாசகர்கள் பெற வசதியாக புத்தகங்களையும் அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் கிராம வாசகர்களும் உயர் கல்வி பயில வசதியாக இருக்கும்,'' என்றார்.