திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே, பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர் மீது, அரசு விரைவு பஸ் மோதியதில், சம்பவ இடத்திலேயே மாணவர் பலியானார். தகவலறிந்த பள்ளி மாணவர்கள், அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து, சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் அடுத்த, கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லாசர். இவரது மகன் எல்டன், 14. இவர் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாண்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல், நேற்று காலை பள்ளிக்கு சென்றார். பள்ளி விட்டதும் மதிய உணவுக்காக, தன் நண்பரின் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். சாப்பிட்டதும் மீண்டும் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சென்னை - திருப்பதி அரசு விரைவு பஸ் தடம் எண் 911, இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே எல்டன் பலியானார்.
விபத்தில் மாணவர் பலியான தகவலறிந்து, பாண்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ்சின் கண்ணாடிகளை, கல் வீசி உடைத்தனர். மேலும், நடவடிக்கைகோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு, திருவள்ளூர் தாலுகா போலீசார் வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களை துரத்தினர். இதனால் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.