உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாலிபரை கொலை செய்ய முயன்ற ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை

வாலிபரை கொலை செய்ய முயன்ற ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை

திருவள்ளூர் : வரப்பில் மாடு மேய்த்ததால் ஏற்பட்ட தகராறில், வாலிபரை கொலை செய்ய முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.வெங்கல் அடுத்த, செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜன் மகன் வெங்கடேசன், 34. இவர் 2008ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி, தனது மாட்டை, இதே கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் நிலத்தின் வரப்பில் மேய்த்துக் கொண்டிருந்தார். இதனால், மகாலிங்கத்துக்கும், வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, வெங்கல் போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் கொடுத்தார். இந்நிலையில் மறுநாள் 6ம் தேதி வெங்கடேசன், அவருக்கு சொந்தமான நிலத்தில் ஏர் உழுது கொண்டிருந்தார். அப்போது மகாலிங்கம், 52, அவரது மகன் புரு÷ஷாத்தமன், 28, அவரது சகோதரர்கள் துளசிராமன், 49, ஜனார்த்தனன், 48, இவரது மகன் குணசேகரன், 21 ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து, உருட்டுக் கட்டை மற்றும் கத்தியால் வெங்கடேசனை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து, வெங்கல் போலீசார் வழக்கு பதிந்து ஐந்து பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கு, திருவள்ளூர் விரைவு கோர்ட்டில் நீதிபதி சாவித்ரி முன்னிலையில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சவுந்தரராஜன் ஆஜராகி வாதாடினார். விசாரணை முடிந்து, நீதிபதி சாவித்ரி தீர்ப்பளித்தார். தீர்ப்பில், வாலிபரை ஆயுதங்களால் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 4,500 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும், 6 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, ஐந்து பேரையும் போலீசார் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை