பள்ளிப்பட்டு : வெண்மை புரட்சியின் மூலம் ஏழைகளுக்கு ஆடு, மாடுகளை இலவசமாக வழங்கி, தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கி சமுதாய புரட்சியை ஏற்படுத்தி வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா என, முன்னாள் அரசு கொறடா நரசிம்மன் பொதுக்கூட்டத்தில் பேசினார். அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 103வது பிறந்த நாள் விழா, பொதுக் கூட்டம் பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில் நடந்தது. பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சேரிபேட்டையில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலர் சீனிவாசன் தலைமை வகித்தார். தலைமைக் கழக பேச்சாளர் ஜலில், பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயலர் சுவாமிநாதன், இளைஞர் அணி மாவட்டச் செயலர் பெருமாள், ஒன்றிய இணைச் செயலர் சுரேஷ், கிளைச் செயலர்கள் கருணாகரன், அமாவாசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அத்திமாஞ்சேரிபேட்டை ஜெயவேலு நன்றி கூறினார்.ஆர்.கே.பேட்டையில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் பலராமன் தலைமை வகித்தார். தொகுதி இணைச் செயலர் ஜெயராமன், ஒன்றிய இளைஞர் அணி செயலர் உத்தண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அரசு கொறடா நரசிம்மன் பேசும்போது, ''தேசிய அளவில் முன்னோடி திட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு 912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மடி கணினியை முதல்வர் ஜெயலலிதா வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆண்டுக்கு 12 ஆயிரம் குடும்பங்களுக்கு 56 கோடி ரூபாய் செலவில் கறவை மாடுகளும், ஒரு குடும்பத்துக்கு 4 ஆடுகள் வீதம் 1 லட்சம் குடும்பங்களுக்கு 135 கோடி ரூபாய் செலவில் ஆடுகளும் வழங்கப்படும்,'' என்றார். இக்கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் இளங்கோவன், பாண்டுரங்கன், தாயார்முனுசாமி, பூபாலன், ஜெயந்தி ஜான், தருமன், நாராயணசாமி, பாலசுந்தரம், மணி, கிளை செயலர்கள் சேகரன், வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.