பொன்னேரி : புறநகர் ரயிகளில் விற்கப்படும் வாட்டர் பாக்கெட்கள் மற்றும் தின்பண்டங்கள் தரமற்றதாக இருப்பதால், அதை வாங்கிச் சாப்பிடும் பயணிகள், பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். சென்னை, சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கமாகவும், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் வேளச்சேரி மார்க்கமாகவும், நூற்றுக்கணக்கான புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும், லட்சக்கணக்கான பயணிகள் தத்தம் பணிகளுக்குச் சென்று திரும்புகின்றனர். இந்த புறநகர் ரயில்களில் பிஸ்கட், சமோசா, பானிபூரி உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை தரமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பது கேள்விக்குறியே. பயணிகளும் ரயில்களில் விற்பனை செய்யப்படும் இந்த தின்பண்டங்கள் சுகாதாரமானதா என்பது தெரியாமல், அவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர். பெரும்பாலும் இவை சுகாதாரமற்ற முறையிலும், தரமற்றதுமாகவே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற வாட்டர் பாக்கெட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற கட்டாய சட்டம் இருக்கிறது. ஆனால், புறநகர் ரயில்களில் விற்பனை செய்யப்படும் வாட்டர் பாக்கெட்களின் மேல் பொறிக்கப்பட்டுள்ள பெயர்கள், முற்றிலும் கேள்விப்படாத பெயர்களாகவே இருக்கின்றன.
பயணிகளும் தாகம் தணிக்க வேறுவழியின்றி, இந்த தரமற்ற வாட்டர் பாக்கெட்களை வாங்கி குடிக்கின்றனர். புறநகர் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தின்பண்டங்கள் தரமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை, ரயில்வே கோட்ட மருத்துவ அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். வியாபாரிகள் இவர்களை முறையாக கவனிப்பதால், அதிகாரிகளும் எவ்வித சோதனைகளும் மேற்கொள்ளாமல் இருந்து விடுகின்றனர். ஆனால், பாதிக்கப்படுவது அப்பாவி பயணிகளே. பயணிகளின் உடல் நலன் கருதி, மருத்துவ அதிகாரிகள் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை சோதனை செய்து, ஆரோக்கியமான உணவுகளை பயணிகளுக்கு வழங்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறிய போது,'புறநகர் ரயில்களில் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு, விற்பனை செய்பவர்களைப் பிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார்.