திருத்தணியில் மின் வினியோகம் வாரிய குளறுபடியால் அவதி
திருத்தணி:'பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்து, பின் வழக்கம்போல மின் வினியோகம் செய்யப்படும்' என்ற மின்துறையின் அறிவிப்பால், வியாபாரிகள் கடும் அவதியடைந்தனர். திருத்தணி கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக, மாதந்தோறும் மின் நிறுத்தம் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நேற்று காலை, திருத்தணி மின்வாரிய அதிகாரிகள், 'திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும்' என, அறிவித்திருந்தனர். நேற்று இரவு 7:00 மணிக்கு, 'மின் வினியோகம் வழக்கம்போல வழங்கப்படும்' எனவும், வரும் 8ம் தேதி மாதாந்திர பராமரிப்புக்காக மின்சாரம் துண்டிக்கப்படும்' எனவும் அறிவித்தனர். இதுகுறித்து, திருத்தணியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மி ன் நிறுத்தம் செய்வதற்கு முன், அந்த நாட்களில் ஏதேனும் அரசு நிகழ்ச்சிகள், முக்கிய விழாக்கள் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக அறிவிக்கின்றனர். இதனால், அரசு அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். திருத்தணி மின்துறை அதிகாரிகளிடம் கேட்டால், மாவட்ட அதிகாரிகளின் உத்தரவின்படி, மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அலட்சியமாக கூறுகின்றனர். எனவே, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.