எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை சாதனை
திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 'எண்டோஸ்கோப்பி' அறுவை சிகிச்சை பிரிவில், ஆந்திர முதியவருக்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்துாரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரச்னைகளுக்கு, மாதந்தோறும் 35க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில நாட்களுக்கு முன், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரின் மூக்கின் வழியாக, மூளை நீர் வடிதலிற்கான சிகிச்சை மேற்கொள்ள, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தார். கடந்த 8ம் தேதி மருத்துவமனை முதல்வர் ரேவதி மற்றும் கண்காணிப்பாளர் வழிகாட்டுதல்படி, காது, மூக்கு, தொண்டை இணை பேராசிரியர் குமார் மற்றும் மருத்துவ குழுவினர், முதியவருக்கு எண்டோஸ்கோப்பிக் என்னும் அரிதான அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பின், முதியவர் நலமுடன் வீடு திரும்பினார். இது மாதிரியான அறுவை சிகிச்சை, முதன்முறையாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது. மருத்துவ குழுவினரை முதல்வர் ரேவதி பாராட்டினார்.