பழவேற்காடு மீனவர்களுக்கு களி நண்டு வளர்க்க பயிற்சி
பழவேற்காடு:தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் பழவேற்காடு பண்ணை ஆராய்ச்சி மையத்தில், மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, களிநண்டு வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.இத்திட்டத்தின் வாயிலாக, களி நண்டு வளர்ப்பு, தொழில்நுட்பம், கொழுப்பு ஏற்றுதல், விதை நண்டு உற்பத்தி செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக, பழவேற்காடு குளத்துமேடு, ஜமீலாபாத் மீனவ பகுதிகளில் உள்ள பண்ணை குட்டைகளில் களி நண்டு வளர்ப்பதற்கான களிநண்டு குஞ்சுகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.இதில், மீன்வள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பெலிக்ஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, களிநண்டு குஞ்சு உற்பத்தி மையத்தை துவக்கி வைத்தார்.களிநண்டு வளர்ப்பு குறித்து, பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வளக் கல்லுாரியின் முதல்வர் ஜெயசகிலா விளக்கமளித்தார்.தொழில்நுட்பங்கள் குறித்து, இத்திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் சிதம்பரம் எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியில், மீன்வளக் கல்லுாரி உதவி பேராசிரியர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் பங்கேற்றனர்.