பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், எஸ்.கே.வி.ஆர்.பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது பொம்மராஜபேட்டை. பள்ளிப்பட்டில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த கிராமம்.பொம்மராஜபேட்டை கிராமத்தில், பொதட்டூர்பேட்டை சாலையை ஒட்டி, சமீபத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. பணிகள் முடிந்தும், இதுவரை இந்த கால்வாயை செயல்படுத்தவில்லை. இதனால், இந்த கால்வாயில் பாய வேண்டிய கழிவுநீர், தொடர்ந்து சாலையில் பாய்ந்து வருகிறது. இந்த வழியாக திருத்தணி மற்றும் பொதட்டூர்பேட்டைக்கு ஏராளமான வாகனங்கள் பயணித்து வருகின்றன. மேலும், இந்த பகுதியில், அங்கன்வாடி மையம், அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. சாலையில் கழிவுநீர் பாய்வதால், பள்ளி மாணவர்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையோரம் நடந்து செல்ல முடிவது இல்லை.சாலையில் பாயும் கழிவுநீரில், இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழும் நிலை ஏற்படுகிறது. பகுதிவாசிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, கழிவுநீர் கால்வாயை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கால்வாய்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலைகளின் ஓரம், மழைநீர் செல்வதற்காக கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை உரிய பராமரிப்பு இன்றி உள்ளது. கால்வாய்களின் மேற்பகுதிகளில் உள்ள சிமென்ட் மூடிகள் உடைந்தும், சேதமடைந்தும் உள்ளன. ஒரு சில இடங்களில், திறந்த நிலையில் உள்ளதால், நடந்து செல்பவர்களில் இதில் சிக்கி சிரமப்படுகின்றனர்.இரவு நேரங்களில் செல்பவர்கள் தடுமாற்றத்துடன் செல்ல வேண்டி உள்ளது. மேலும், திறந்த நிலையில் இருக்கும் பகுதிகளில் குப்பை கழிவுகள் குவிந்து, மழைநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. கால்வாய் மூடிகள் தரமற்றதாக அமைக்கப்பட்டதால், குறைந்த சுமையை கூட தாங்க முடியாமல் ஆங்காங்கே உடைந்து, சேதம் அடைவதாகவும், தொடர் பராமரிப்பு மேற்கொள்வதில், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அக்கறை காட்டுவதில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.சேதமடைந்து கிடக்கும் இவற்றை உடனடியாக சீரமைத்து, தொடர் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.