உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திருத்தணி முருகன் கோவிலில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் :புத்தாண்டு தினம்

 திருத்தணி முருகன் கோவிலில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் :புத்தாண்டு தினம்

- நமது நிருபர் குழு-: புத்தாண்டு தினத்தையொட்டி, நேற்று திருத்தணி முருகன் கோவிலில் ஐந்து மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதுபோல் திருவள்ளூர் வீரராகவர் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. வசந்த மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு தங்க தேரில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புத்தாண்டையொட்டி அதிகாலை முதல், இரவு 9:00 மணி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பொது வழியில் 5 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். டிச., 31ல் படித்திருவிழா மற்றும் நேற்று புத்தாண்டு சிறப்பு தரிசனத்தையொட்டி, கோவில் முழுதும், வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தனுர் மாத பூஜை, புத்தாண்டு பிறப்பு ஆகியவற்றை முன்னிட்டு நேற்று காலை, 4:00 மணிக்கு கனகவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. 5:00 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை திருநீலகண்டேஸ்வரர் கோவில், சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், பெரியபாளையம்பவானியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில், கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில், பிரசன்ன வெங்கடேச பெருமாள், கவரைப்பேட்டை அடுத்த அரியதுறை வரமூர்த்தீஸ்வரர், பஞ்செட்டி அகத்தீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பொன்னேரி ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணிய சுவாமி, மீஞ்சூர் ஏகாம்பரநாதர், வரதாஜ பெருமாள், அத்திமாஞ்சேரிபேட்டை, நெல்லிக்குன்றம் சுப்ரமணி சுவாமி கோவில், பள்ளிப்பட்டு நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சண்முகம்
ஜன 02, 2026 07:04

தமிழ் வருடப் பிறப்புக்கு இல்லாத கூட்டம் ஆங்கில வருடப் பிறப்பிற்கு ஏன்? அப்படியே இங்கிலாந்து மன்னருக்கும் ஒரு கும்பிடு போடுவார்களா?


புதிய வீடியோ