வார்டு சபை கூட்டம் 23 மனுக்கள் ஏற்பு
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், மூன்று வார்டுகளில் நடந்த வார்டு சபை கூட்டங்களில், 23 மனுக்கள் ஏற்கப்பட்டன. தமிழகத்தில் கிராம சபை போல், மாநகர, நகர மற்றும் பேரூராட்சி சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. நேற்று முதல் நாளை வரை இக்கூட்டங்கள் நடைபெறும். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில் நேற்று, 3, 12, 14 ஆகிய மூன்று வார்டுகளில் கூட்டங்கள் நடந்தன. மூன்றாவது வார்டில், பேரூராட்சி தலைவர் அப்துல்ரஷீத், 12, 14 வார்டுகளின் கவுன்சிலர்கள் வெங்கடேசன், சுமலதா ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் சாலை, தெருவிளக்கு, சுகாதார வளாகம் சீரமைப்பு உள்ளிட்ட, 23 மனுக்கள் பெறப்பட்டன. 'இந்த மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.