| ADDED : ஜூலை 12, 2011 12:22 AM
ஏரல் : குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப்பெருந்திரு விழா இன்று கோலாகலமாக நடக்கிறது.ஏரல் அருகேயுள்ள குரங்கணிமுத்துமாலை அம்மன் கோயில் தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் நடக்கும் ஆனிப்பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். திருவிழாவின் போது தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர். ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதம் இரண்டாவது செய்வாய்கிழமை கால்நாட்டப்பட்டு நான்காவது செவ்வாய்கிழமை ஆனிப்பெருந்திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான ஆனித்திருவிழா கால்நாட்டு விழாவுடன் துவங்கியது. கால்நாட்டு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நேற்று மாலை மகுட ஆட்டமும், ஆன்மிக சொற்பொழிவும், இரவு பட்டிமன்றமும் அதைத்தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய திருவிழாவான இன்று ஆனிப்பெருந்திருவிழா கோலாகலமாக நடக்கிறது. இன்றுகாலை 10 மணிக்கு கூட்டுவழிபாடும், 11 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, மாலை 3 மணிக்கு பக்தி பாடல் மற்றும் 6 மணிக்கு மங்கள இசை ஆகிய நிகழ்ச்சிகளும் ,இரவு 1 மணிக்கு நாராயணசுவாமி தேவி சமேதராய் சின்ன சப்பரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு நாராயணசுவாமி தேவி சமேதராய் பெரிய சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். வரும் 19ம் தேதி பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. இன்று நடக்கும் ஆனிப்பெருந்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ் நாடு முழவதும் இருந்து பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் குரங்கணியில் குவிந்துள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சென்னைவாழ் குரங்கணி நாடார் சங்கம் மற்றும் கோயில் அறங்காவலர்கள், விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.