துாத்துக்குடி:மதுரை தமிழன் தெரு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 25 பேருடன் ஒரு வேனில் துாத்துக்குடி மாவட்டம், கொல்லம் பரம்பு பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், 47, என்பவர் வேனை ஓட்டினார்.மதுரை - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டையபுரம் காவல் நிலையம் அருகே வந்தபோது வேன் திடீரென நிலை தடுமாறியது. சிறிது நேரத்தில் சாலையோரத்தில் இருந்த பாலத்தின் மீது மோதி கழிவுநீர் ஓடைக்குள் இறங்கியது. வேனில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த ஈஸ்வரன், 51, ராமலட்சுமி, 40, நவீன் பாண்டி, 19, யுவராஜ், 10, சுபஸ்ரீ, 15, ஷாலினி, 20, பரமேஸ்வரன், 9, வித்யா சங்கர், 31, வித்யா, 29, சண்முகக்கனி, 80, புஷ்பம், 60, முருகேஸ்வரி, 50, ரூபன் சக்கரவர்த்தி, 8, பெருமாள், 53 உள்பட 14 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களை மீட்ட போலீசார், அவர்களை சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து எட்டையபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.