| ADDED : மே 28, 2024 01:17 AM
வேம்பார் : துாத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு, பீடி இலை மூட்டைகள் கடத்துவது நடக்கிறது. துாத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, எஸ்.ஐ., ஜீவமணி தர்மராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வேம்பார் கடற்கரை பகுதியில் திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சூரங்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேம்பார் கடற்கரை பகுதியில், சந்தேகப்படும்படியாக நின்ற நாட்டுப்படகில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த படகில், 84 மூட்டைகளில் பீடி இலை இருந்தது தெரிந்தது. அதன் மதிப்பு 50 லட்சம் ரூபாய்.இதையடுத்து, நாட்டுப்படகு, 84 மூட்டை பீடி இலை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தாளமுத்துநகரை சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வேம்பார் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 84 மூட்டை பீடி இலைகளும், படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்தது தெரிந்தது.